14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கும் மலேசியத் தம்பதியர்

1 mins read
fdcf4794-b4e6-4d92-aeae-a8d38ae6e55e
இஸ்‌ரேலிய ஆடவருக்கு ஆயுதங்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியத் தம்பதியர். - படம்: மலேசிய ஊடகம்

கிள்ளான்: இஸ்‌ரேலிய நாட்டவருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ததாக மலேசியத் தம்பதியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 41 வயது ஷரிஃபா ஃபாராஹா சயீது உசேனுக்கும் அவரது கணவரான 43 வயது அப்துல் அஸிம் முகம்மது யாசினுக்கும் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும் ஷரிஃபா ஃபாராஹா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தமது மனைவியிடம் துப்பாக்கி இருந்தது தெரிந்தும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்துல் அஸிம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றங்களுக்குப் பிணை வழங்கப்படாததால் இருவரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை.

இந்தத் தம்பதியரை மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று கோலா சிலாங்கூரில் உள்ள நோன்புப் பெருநாள் சந்தையில் மலேசியக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மார்ச் 27ஆம் தேதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அம்பாங் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் இஸ்‌ரேலிய நாட்டவரான ஷலோம் அவிட்டான் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த ஆறு துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை அவர் இத்தம்பதியரிடமிருந்து வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

போலி பிரெஞ்சுக் கடப்பதிழைப் பயன்படுத்தி 36 வயது அவிட்டான் மலேசியாவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்