டெக்சஸ் ‘புல்லட்’ ரயில் குறித்து பைடன், கிஷிடா கலந்துரையாடக்கூடும்

டெக்சஸ் ‘புல்லட்’ ரயில் குறித்து பைடன், கிஷிடா கலந்துரையாடக்கூடும்

2 mins read
90eb7318-6675-4f33-9446-9c9dd36febae
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சஸ் அதிவேக ரயில் கட்டமைப்பு பற்றி அவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஜப்பானிய ‘புல்லட்’ ரயில்களைப் பயன்படுத்தி அமெரிக்காவின் முதல் அதிவேக ரயில் கட்டமைப்பை டெக்சஸ் மாநிலத்தில் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் புதுப்பிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் அவர் கலந்துரையாடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குத் திரு கிஷிடா அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜப்பானியப் பிரதமர் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான மிக நெருங்கிய பாதுகாப்பு, பொருளியல் உறவை உலக நாடுகளுக்குக் காட்ட இந்தப் பயணம் இலக்கு கொண்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் கலந்துரையாடலுக்குப் பிறகு இருநாட்டுத் தலைவர்களும் இந்தப் பல பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள திட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்சஸ் மாநிலத்தின் டெலஸ் நகரையும் ஹியூஸ்டன் நகரையும் அதிவேக ரயில் மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜப்பானிய வெளியுறவு அமைச்சும் வெள்ளை மாளிகையும் மறுத்துவிட்டன.

இந்த அதிவேக ரயில் திட்டத்துக்கு இருநாட்டுத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தால் அமெரிக்காவின் கூட்டரசு ரயில் நிர்வாகம், போக்குவரத்து தொடர்பான மற்ற துறைகள் ஆகியவற்றிடமிருந்து நிதி கிடைக்கக்கூடும்.

இத்திட்டத்துக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் திட்டத்துக்கு டெக்சஸ் மாநிலத்திலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் புட்டிகியேக் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்