தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பெற்றோருக்குச் சிறை

2 mins read
562e9386-ccb7-4720-9344-bc3cb872d7dd
தங்கள் மகனுக்கு மனநலப் பிரச்சினை இருப்பதும் வன்முறைச் செயல்களில் இறங்கும் அபாயம் உள்ளது எனத் தெரிந்தும் அதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை ஜேம்ஸ் மற்றும் ஜெனிஃபர் கிரம்பிலி எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாகத் தமது மகனுக்குத் துப்பாக்கி ஒன்றை ஜேம்ஸ் வாங்கித் தந்ததாக விசாரணையில் தெரியவந்தது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பதின்மவயது ஆடவரின் பெற்றோருக்கு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிள்ளையின் குற்றச் செயல் தொடர்பாக நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றத்துக்காக அமெரிக்காவில் பெற்றோருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

46 வயது ஜெனிஃபர் கிரம்பிலிவுக்கும் அவரது கணவரான 47 வயது ஜேம்சுக்கும் முறையே 10 மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் ஏற்கெனவே 28 மாதங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது கருத்தில் கொள்ளப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய அவர்களது மகனான ஈத்தனுக்கு முன்னதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குத் தற்போது 17 வயது.

2021ஆம் ஆண்டு நவம்பர் 30ல் அவர் டேட்டிராய்ட் நகருக்கு வடக்கில் உள்ள ஆக்ஸ்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அதில் நான்கு மாணவர்கள் மாண்டனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

“பெற்றோர் தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. பிள்ளைகளைச் சரியான முறையில், ஒழுங்காக வளர்க்காததற்காக இந்தத் தண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக, அபாயம் உள்ளது என்று தெரிந்தும், எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதற்கும், பெரும் துன்பச் சம்பவத்தைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவவிட்டதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,” என்று ஓக்லேண்ட் கௌன்ட்டி சர்கிட் நீதிமன்றத்தின் நீதிபதி செரில் மேத்யூஸ் தெரிவித்தார்.

தங்கள் மகனுக்கு மனநலப் பிரச்சினை இருப்பதும் வன்முறைச் செயல்களில் இறங்கும் அபாயம் உள்ளது எனத் தெரிந்தும் அதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை ஜேம்சும் ஜெனிஃபரும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாகத் தமது மகனுக்குத் துப்பாக்கி ஒன்றை ஜேம்ஸ் வாங்கித் தந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஈத்தன் தாக்குதல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்