ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று சுற்றுப்பயணி ஒருவர் மீது பாறை விழுந்தது. இதில் அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அந்தச் சுண்ணாம்புக் குன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேராக் மாநிலத்தின் நிர்வாக மன்ற உறுப்பினர் லோ சீ யீ தெரிவித்துள்ளார்.
அங்கு செல்லும் சுற்றுப்பயணிகளுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய அந்தக் குன்றில் ஆய்வு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஏப்ரல் 8ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் தாமான் சைகாட்டில் உள்ள சிங் சின் லிங் பொழுதுபோக்கு, கலாசாரக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த 44 வயது உள்ளூர் சுற்றுப்பயணியின் தலையில் பாறை விழுந்ததில் அவர் மாண்டதாக திரு லோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாண்டவர் பேராக் மாநிலத்தின் பங்கோர் தீவைச் சேர்ந்தவர் என்றார் அவர்.
அவரின் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.

