கெய்ரோ: ஏப்ரல் 10ஆம் தேதியன்று காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டனர்.
மகன்களை இழந்த சோகம் இருந்தாலும், இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட வேண்டும் என திரு ஹனியே கொண்டிருக்கும் முனைப்பு கடுகளவும் குறையவில்லை.
பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பின் நிலைப்பாடு, இஸ்ரேலுக்கு எதிரான போர் ஆகியவற்றை தமக்கு ஏற்பட்ட இழப்பு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
சண்டை நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்துலக அமைப்புகளின் உதவியுடன் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இன்னும் தீர்வு காண முடியவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பை திரு ஹனியே பிரதிநிதிப்பது குறிப்பிடத்தக்கது.
“எனது பிள்ளைகளைக் கொன்றுவிட்டால் நான் இடிந்துபோய் விடுவேன் என்றும் ஹமாஸ் அமைப்பின் நிலைப்பாடு மாறும் என்றும் இஸ்ரேல் நினைத்தால் அது மிகவும் தவறு. எங்களுக்கு உயிற்சேதம் ஏற்பட்டாலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம், சரணடைய மாட்டோம்,” என்று திரு ஹனியே கூறினார்.
தமது உறவினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 10ஆம் தேதியன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தமது மூன்று மகன்களுடன் சில பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக திரு ஹனியே கூறினார்.

