சோல்: வடகொரியாவைச் சுற்றி புவிசார் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, அதனால் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் ராணுவப் பல்கலைக்கழகத்திற்கு கிம் சென்றபோது அங்கிருந்த மாணவர்களிடம் அந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
அண்மை ஆண்டுகளாக வடகொரியா ஆயுதங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளது.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவிவருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இம்மாதத் தொடக்கத்தில் திட எரிபொருள்கள் உதவியால் இயங்கும் ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சி சோதனை செய்தது. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் தங்களுக்கு அச்சுறுத்தல் தருவதாக கிம் தெரிவித்தார்.