தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியரின் பெயரைக் கிண்டல் செய்த கனடிய நிறுவனம் அவருக்கு $10,000 வழங்கியது

2 mins read
777933fe-dfae-4e00-8509-816b3cb6c615
நல்லெண்ண அடிப்படையில் திரு புவன் சித்ரான்ஷுக்கு (படம்) $10,000ஐ டிபிரேண்ட் நிறுவனம் வழங்கியது. - படம்: எக்ஸ்/புவன் சித்ரான்ஷ்

மேக்புக் மடிக்கணினி துணைச் சாதனம் குறித்து புகார் அளித்த இந்திய ஆடவர் ஒருவரின் மனதைப் புண்படுத்திய கனடிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘டிபிரேண்ட்’ எனும் அந்த நிறுவனத்தின் மேக்புக் மடிக்கணினி உறையை வாங்கிய இரண்டே மாதங்களில் அதன் வண்ணம் மாறிவிட்டதாக புவன் சித்ரான்ஷ் என்பவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

டிபிரேண்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை டேக் செய்து, அந்த மேக்புக் உறையின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “சில மாதங்களுக்கு முன்பு இந்த உறையை வாங்கினேன். இரண்டே மாதங்களில் அதன் வண்ணம் நிலைக்கவில்லை. நான் என்ன செய்வது?” எனப் பதிவிட்டார்.

அதற்குப் பதிலளித்த அந்த கனடிய நிறுவனம், திரு சித்ரான்ஷின் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டது. அவரது கடைசிப் பெயரை அவமதிக்கும் விதமாக அந்தக் கருத்து அமைந்தது.

அந்நிறுவனத்தின் கருத்து இணையவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் கண்மூடித்தனமான பதிலைக் கண்டித்து பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக எதிர்ப்பு வலுத்ததை உணர்ந்த அந்நிறுவனம், தனது கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டது.

தான் “பெரிய தவறு” செய்துவிட்டதை ஒப்புக்கொண்ட டிபிரேண்ட், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகக் கூறியது.

நல்லெண்ண அடிப்படையில் அந்த இந்திய ஆடவருக்கு $10,000ஐ அந்நிறுவனம் வழங்கியது.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஊடகத்தில் வாடிக்கையாளர்களைக் கேலி செய்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அந்நிறுவனம், “நாங்கள் இதை நிறுத்தப் போவதில்லை, ஆனால், அடுத்த முறை $10,000ஐ பெறப் போவது நீங்களாகவும் இருக்கலாம்,” என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்