இஸ்தான்புல்: துருக்கியின் தென்பகுதியில் உள்ள அன்டல்யா வட்டாரத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி, கம்பி வட வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக அந்த மாநில ஆளுநர் அலுவலகமும் ஒலிபரப்பு நிலையங்களும் தெரிவித்தன.
உடைந்து விழுந்த கம்பி வடத் தூணில் அந்த கம்பி வட வண்டி மோதியதாகக் கூறப்பட்டது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக ஆளுநர் அலுவலகம் கூறியது.
விபத்தை அடுத்து 24 கம்பி வட வண்டிகள் அந்தரத்தில் தொங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏழு கம்பி வட வண்டிகளில் இருந்த 40 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். மற்ற வண்டிகளில் இருக்கும் 134 பேரை மீட்கும் பணி தொடர்வதாகக் கூறப்பட்டது.
மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அன்டல்யா நகரின் கண்கொள்ளா காட்சியைக் காண ஒன்பது நிமிடங்களில் கம்பி வட வண்டிகள் மலை மேல் இட்டுச்செல்லும் என்று தெரிகிறது. அங்கு 36 கம்பி வட வண்டிகள் சேவை வழங்குவதாகவும் ஒவ்வொன்றிலும் ஆறு பேர் வரை அமரலாம் என்றும் ஆளுநர் அலுவலகத்தில் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


