‘இஸ்‌ரேல் பதிலடி கொடுத்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்’

2 mins read
860dd9e7-185f-42a7-97f7-fdf37d255dba
இஸ்‌ரேலிய அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்திய இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

தெஹ்ரான்: இரவோடு இரவாக இஸ்‌ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியது. இஸ்‌ரேலெங்கும் பல இடங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டது.

இது இஸ்‌ரேல் மீது ஈரான் முதல்முறையாக நடத்தியுள்ள நேரடித் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சொந்தமான ஐந்து மாடிக் கட்டடத்தை இஸ்‌ரேல் தகர்த்தது. இதில் இரு ஜெனரல்கள் உட்பட ஈரானியப் புரட்சிப் படையைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மாண்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கவே ஏப்ரல் 13ஆம் தேதி இரவு, இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.

பழிக்குப் பழி வாங்கிவிட்டோம் என்றும் இத்துடன் இஸ்‌ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகும் இஸ்‌ரேல் தன்மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அல்லது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தினால் நாட்டின் இறையாண்மையைக் காக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஈரானியப் புரட்சிப் படையினர் ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்று ஈரானிய அரசாங்கம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையே, போரில் இஸ்‌ரேல் வெற்றி பெறுவது உறுதி என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்‌ரேலை நோக்கி ஈரான் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதுடன் ஏவுகணைகளையும் பாய்ச்சியதாக அவர் கூறினார்.

அவற்றில் பெரும்பாலனவற்றை இஸ்‌ரேலிய ராணுவமும் அமெரிக்க ராணுவமும் சுட்டு வீழ்த்தியதாக திரு நெட்டன்யாகு கூறினார்.

ஈரானுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இஸ்‌ரேலிய ராணுவம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈரானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்‌ரேலிய அதிகாரிகள் அறிவித்திருப்பதாக இஸ்‌ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஈரான்