26 ஆண்டுகள் காணப்படாத சரிவை நோக்கி ரிங்கிட்

26 ஆண்டுகள் காணப்படாத சரிவை நோக்கி ரிங்கிட்

2 mins read
90f8ada0-4eb2-484c-86a4-0f065f962800
மலேசிய ரிங்கிட். - படம்: சாவ்பாவ்

கோலாலம்பூர்: மலேசியாவின் ரிங்கிட் நாணயம், 26 ஆண்டுகளில் காணாத அளவு சரியும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

நிலைமையைக் கையாள உதவிக்கரம் நீட்டத் தாங்கள் தயாராய் இருப்பதை மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா) மறுவுறுதிப்படுத்தியது.

நாணயச் செலாவணிச் சந்தை சீரான முறையில் செயல்படுவதைத் தாங்கள் உறுதிப்படுத்தப்போவதாக திங்கட்கிமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்தது. அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், பெரிய நிறவனங்கள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் அவ்வாறு செய்யப்போவதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.

திங்கட்கிழமையன்று ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.78 வரை சரிந்தது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று டாலருக்கு நிகரான அதன் மதிப்பு 4.8053க்கு விழுந்தது. திங்கிட்கிழமையன்று ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட அந்த அளவு விழுந்தது. 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு இவ்வாண்டு பிப்ரவரி 21ஆம் தேதிதான் ரிங்கிட்டின் மதிப்பு அந்த அளவு குறைந்தது.

எனினும், தென்கொரியாவின் வோன், பிலிப்பீன்சின் பெசோ, தைவான் டாலர் போன்ற இதர வட்டார நாடுகளின் நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் ரிங்கிட் வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு 3.5122ஆக இருந்தது. அன்றைய நாள் இறுதியிலும் அதன் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை.

அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா மத்திய வங்கி சில நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ரிங்கிட் மீண்டு வந்தது.

அமெரிக்கா டாலர் வலுவாக இருப்பது, மலேசியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவின் பொருளியல் மந்தமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் ரிங்கிட்டின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்