பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த உறவை மரணம் பறித்துக்கொண்டது

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த உறவை மரணம் பறித்துக்கொண்டது

2 mins read
65ab40ab-f75d-4428-a8bb-a3824bdad823
தமது தந்தையுடன் வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக இருக்க முடிந்தபோதிலும் அவர் உயிர்பிரிந்த நேரத்தில் அவருடன் இருப்பதற்கான பாக்கியம் தமக்கும் தமது இரு சகோதரிகளுக்கும் கிடைத்தது என்று திரு அலி ஜயிசின் மகளான திருவாட்டி ஹஸ்லினா மனநெகிழ்வுடன் கூறினார். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு தங்கள் தந்தை சிங்கப்பூரில் இருப்பதாகவும் பிரிந்த உறவு ஒன்று சேர்ந்துவிட்டதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திரு அலி ஜயிசின் பிள்ளைகள் செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

மலேசியரான திரு அலி, அதற்கு முன்பு 20 ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று அவரது மூன்று பிள்ளைகளுக்கும் தெரியாது.

ஆனால் அவர்களது மகிழ்ச்சி குறுகிய காலகட்டத்துக்கு மட்டுமே நீடித்தது.

தங்கள் தந்தையுடன் அவர்களால் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ஒன்றாக இருக்க முடிந்தது.

திரு அலி, ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கிளந்தான் மாநிலத்தில் உள்ள பாசிர் புத்தே மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

நோன்புப் பெருநாளைத் தங்களுடன் கொண்டாட தமது தந்தையை கிளந்தானுக்கு அழைத்துச் சென்றதாக திரு அலியின் மகளான திருவாட்டி ஹஸ்லினா தெரிவித்தார்.

ஆனால் நோன்புப் பெருநாளுக்கு மறுநாள் திரு அலிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக அவர் கூறினார்.

எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

திரு அலியின் நல்லுடல் ஏப்ரல் 15ஆம் தேதியன்று அடக்கம் செய்யப்பட்டது.

திரு அலியை அவரது பிள்ளைகள் தேடுவதாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான செய்தி சிங்கப்பூரர்களின் கவனத்தை ஈர்த்தது.

அவர்களுக்கு உதவ சிங்கப்பூரர்கள் பலர் முன்வந்தனர்.

செய்தி வெளியாகி 24 மணி நேரத்துக்குள் அவர் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள மூத்தோருக்கான தாதிமை இல்லம் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அக்காலகட்டத்தில் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூர்-மலேசியா எல்லை மூடப்பட்டிருந்தது.

இருப்பினும், இருநாடுகளின் அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு காரணமாக திரு அலியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து, மலேசியாவில் உள்ள தமது பிள்ளைகளுடன் அவர் சேர்த்துவைக்கப்பட்டார்.

தமது தந்தையுடன் வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக இருக்க முடிந்தபோதிலும் அவர் உயிர்பிரிந்த நேரத்தில் அவருடன் இருப்பதற்கான பாக்கியம் தமக்கும் தமது இரு சகோதரிகளுக்கும் கிடைத்தது என்று திருவாட்டி ஹஸ்லினா மனநெகிழ்வுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்