தாக்குதல்காரரைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவருக்குக் குடியுரிமை வழங்க முன்வந்துள்ள ஆஸ்‌திரேலியா

1 mins read
2635ddff-23c1-4094-88f3-1f7c130a77f6
கடைத்தொகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மாண்டோருக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் அண்டனி அல்பனிஸ் (இடமிருந்து மூன்றாவது) மலரஞ்சலி செலுத்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ஆடவரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பிரான்ஸ் நாட்டவருக்கு ஆஸ்‌திரேலியக் குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் அண்டனி அல்பனிஸ் முன்வந்துள்ளார்.

வெறும் ஒரு கம்பைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய 40 வயது ஜொவேல் கௌச்சியைத் திரு டேமியன் கிரோ அடித்து விரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

துணிச்சலுடன் செயல்பட்ட திரு கிரோவைப் பிரதமர் அல்பனிஸ் ஏப்ரல் 16ஆம் தேதியன்று பாராட்டினார்.

கம்பைப் பயன்படுத்தி கௌச்சியை திரு கிரோ எதிர்கொண்டதால் பலர் உயிர் தப்பியதாகப் பிரதமர் அல்பனிஸ் கூறினார்.

“விசா தொடர்பான விண்ணப்பங்களைத் திரு டேமியன் கிரோ சமர்ப்பித்துள்ளார். அவரிடம் இதைச் சொல்ல விரும்புகிறேன். ஆஸ்திரேலியா உங்களை அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்.

“திரு கிரோவுக்கு ஆஸ்திரேலியக் குடியுரிமை வழங்கத் தயாராக இருக்கிறோம். அவரது துணிச்சலுக்கு நன்றி,” என்று திரு அல்பனிஸ் தெரிவித்தார்.

சிட்னி கடைத்தொகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பெண்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி ஒருவரும் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்