தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புல்லட் ரயிலில் பாம்பு; சேவை தாமதம்

2 mins read
e74119c1-5c65-4988-bef6-6c779c764ea1
ஜப்பானின் புல்லட் ரயில் சேவையில் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் புல்லட் ரயில் சேவை மிகவும் பிரபலமானது. அச்சேவையில் தாமதம் ஏற்படுவது அரிது. இப்படித் திட்டமிட்டுத் திறம்படச் செயல்படும் ஜப்பானின் புல்லட் ரயில் சேவையைப் பாம்பு ஒன்று தாமதமாக்கியுள்ளது.

நகோயாவிற்கும் தோக்கியோவிற்கும் இடையே சென்ற புல்லட் ரயில் ஒன்றில் 40 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பாம்பு ஒன்று பதுங்கியிருப்பது குறித்துப் பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) மத்திய ஜப்பானிய ரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் அளித்தார்.

அந்தப் பாம்பு நச்சுத்தன்மை கொண்டதா, எப்படி ரயிலுக்குள் அப்பாம்பு வந்தது போன்ற தகவல்கள் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை எனவும் இச்சம்பவத்தால் பயணிகள் யாரும் பீதியோ காயமோ அடையவில்லை எனவும் மத்திய ஜப்பானிய ரயில்வே நிர்வாகத்தின் பேச்சாளர் ஏஎஃப்பியிடம் கூறினார்.

இதனால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாரும் பீதியடையவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் உருவத்தில் சிறிய ரக நாய்கள், பூனைகள், புறாக்கள் போன்றவற்றைக் கொண்டுசெல்லலாம். ஆனால், பாம்புகளுக்கு அனுமதியில்லை.

“புல்லட் ரயிலுக்குள் பாம்புகளைக் கொண்டுவரக்கூடாது. அதற்கு எதிரான சட்டங்கள் எங்களிடம் உள்ளன,” என அவர் ஏஎஃப்பியிடம் குறிப்பிட்டார்.

“இருப்பினும் நாங்கள் பயணிகளின் உடைமைகளைப் பரிசோதிப்பதில்லை,” என்றார் அவர்.

“இந்த ரயில் ஒசாகாவிற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரயிலில் பாம்பு இருப்பது குறித்துத் தகவல் கிடைக்கவே நிர்வாகம் வேறு ரயிலைப் பயன்படுத்த முடிவு செய்தது. இதனால், புல்லட் ரயில் சேவையில் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது,” என அவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்