தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2019 இலங்கை குண்டுவெடிப்பு விசாரணை: நம்பிக்கை இழந்த கத்தோலிக்க தேவாலயம்

2 mins read
fccc8dd6-046f-4ee7-989a-9b8ee59d7bd7
வருத்தம் தெரிவித்த இலங்கையின் கத்தோலிக்க தேவாலயத் தலைவர் கார்டினல் மால்கம் ரஞ்சித். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கையில் 279 பேரை பலிவாங்கிய 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தின வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தும் விசாரணையில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அந்நாட்டின் கத்தோலிக்க தேவாலயம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) தெரிவித்தது.

அச்செயலுக்கு நியாயம் கிடைக்க இறைவனை நாடப்போவதாகவும் கத்தோலிக்க தேவாலயம் சொன்னது.

இஸ்லாமிய தற்கொலைத் தாக்குதல்காரர்கள் 2019ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று இலங்கையின் மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஹோட்டலக்ளிலும் தாக்குதல் நடத்தினர். பல ஆண்டு காலம் நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது; அதற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் அந்நாடு சந்தித்த ஆக மோசமானதாகும்.

அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களை அதிகாரிகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவர் என்ற நம்பிக்கை பெரும்பான்மை பெளத்த சமயத்தினரைக் கொண்ட இலங்கையின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கு இல்லை என்று அதன் தலைவரான கார்டினல் மால்கம் ரஞ்சித், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2019ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு 17 நாள்களுக்கு முன்பு எச்சரிக்கைகள் இருந்ததாகவும் அதிகாரிகள் அவற்றைக் கவனத்தில்கொண்டு செயல்படவில்லை என்றும் உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணைகளில் தெரியவந்தது. தாக்குதல்களில் இலங்கையின் உளவுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டும் இலங்கை நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டது.

“அதிகாரத்தில் இருப்போர் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் செய்யவில்லை,” என்றார் கார்டினல் ரஞ்சித்.

“நமது அரசியல் தலைவர்களின் இந்தப் போக்கு எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தக் கட்டமைப்பின் மீது இப்போது எங்களுக்கு நம்பிக்கை இல்லை,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்