‘கடன் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்ற பெண்’

‘கடன் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்ற பெண்’

1 mins read
2f4d8631-89f3-4806-8303-5054fddbd4ea
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: ஜொர்னொலோடியா / எக்ஸ்

பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

68 வயது பாவ்லோ ராபர்ட்டோ பிராகா எனும் ஆடவரின் சடலத்தை எரிக்கா டி சூஸா வியேரா நூனெஸ் எனும் மாது, ரியோ டி ஜெனிரோ நகரில் பாங்கு எனும் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சக்கர நாற்காலியில் கொண்டு சென்றதாக ஒ’ குளோபோ ஊடகம் தெரிவித்தது.

திருவாட்டி நூனெஸ் அந்தப் பரிவர்த்தனையை மேற்கொள்வது பதிவானதாகக் கூறப்படும் காட்சியை வங்கி ஊழியர் ஒருவர் காணொளியில் பதிவுசெய்தார். நிலைமை ஏதோ சரியில்லாததை உணர்ந்த வங்கி ஊழியர் சம்பவத்தைக் காணொளியில் பதிவுசெய்தார்.

திருவாட்டி நூனெஸ் கைதுசெய்யப்பட்ட பிறகு அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது.

அந்தக் காணொளியில் திருவாட்டி நூனெஸ், திரு பிராகாவின் சடலத்திடம் பேசிக்கொண்டிருந்தது பதிவானதாகக் கூறப்படுகிறது. திரு பிராகா பார்ப்பதற்கு ‘உடல்நலம் சரியில்லாததுபோல் இருந்ததை’ இன்னொரு வங்கி ஊழியர் கவனித்தார்.

பிறகு வங்கி ஊழியர்கள் அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைத்ததுடன், காவல்துறையிடம் புகாரும் கொடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்