ஈரானைத் தாக்கிய இஸ்ரேல்

ஈரானைத் தாக்கிய இஸ்ரேல்

2 mins read
உடனடியாகப் பதிலடி கொடுக்கத் திட்டமில்லை என்கிறது தெஹ்ரான்
19747519-e871-4b4c-b26d-0226a303d0ba
இஸ்ஃபகான் நகரில் உள்ள ஷெகாரி விமானப்படைத் தளத்திற்கு அருகே மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. - படம்: வாரிஸ்ஜோக்கியோ98/எக்ஸ் தளம்

வாஷிங்டன்: ஈரான் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் மோதல் வலுவடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்த வேளையில், ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்புகளிலிருந்து அந்தச் சத்தம் கேட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் கூறினார்.

இஸ்ஃபகான் நகர வான்வெளியைக் கடந்து சென்ற மூன்று ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

அந்தச் சிறியரக ஆளில்லா வானூர்திகள் ஈரானுக்குள் ஊடுருவியவர்களால் இயக்கப்பட்டவை என்று ஈரானின் அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.

இஸ்‌ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உடனடியாகப் பதிலடி தரும் திட்டம் ஏதுமில்லை என்று ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“இச்சம்பவத்துக்குக் காரணமான வெளிநாட்டுச் சக்தி எதுவென்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

“வெளிநாட்டிலிருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் என்பதைவிட ஊடுருவல் என்ற கோணத்திலேயே இச்சம்பவம் பார்க்கப்படுகிறது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.

ஈரானியத் தலைமைத்துவமும் ராணுவமும் இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.

முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி டமாஸ்கசில் உள்ள ஈரானியத் தூதரகத்தின் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.

ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி அதற்குப் பதிலடி தந்தது ஈரான்.

அதைத் தொடர்ந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

ஈரான் மீது இஸ்‌ரேல் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக ஏபிசி, சிபிஎஸ் செய்தி நிறுவனங்கள் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டபோதும் ஈரானிய செய்தி அறிக்கைகள் இஸ்ரேல் குறித்து எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் சேதமடையவில்லை என்பதை அனைத்துலக அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்