தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

1 mins read
03188d53-a7f7-4c6a-9f8b-e2994677b74e
கோலாலம்பூரில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதியன்று அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள், சுற்றுக்காவல் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரு முனையங்களிலும் காவல்துறை அதிகாரிகளுடன் காவல்துறை சிறப்புப் படை அதிகாரிகளும் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுவர் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நுழைவாயில்கள், விமான நிலையத்துக்கு வெளியே ஆகிய இடங்களிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறை சிறப்புப் படையினர் சுற்றுக்காவலில் ஈடுபடுவர் என்று அவர் கூறினார்.

அதிகாரிகள் மின்ஸ்கூட்டர் பயன்படுத்தி சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடும் முறை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு உசேன் தெரிவித்தார்.

ஏப்ரல் 14ஆம் தேதியன்று 38 வயது ஹஃபிசுல் ஹராவி, விமான நிலையத்தில் இருந்த தமது மனைவியைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறி அவரது மனைவியின் மெய்க்காப்பாளரின் வயிற்றில் தோட்டா பாய்ந்தது.

அங்கிருந்து தப்பிச் சென்ற ஹஃபிசுலை கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்