சால்வையால் தலையை மறைக்க முற்பட்ட இளையருக்கு யூடியூப் பிரபலம் பதிலடி

சால்வையால் தலையை மறைக்க முற்பட்ட இளையருக்கு யூடியூப் பிரபலம் பதிலடி

2 mins read
eb626b8b-153e-41f0-84c3-30d0ebb5c9f9
தமது சொந்த சால்வையால் யூடியூப் பிரபலத்தின் தலையை மறைக்க முற்படும் இளையர். - படம்: @AwesomeMughals/எக்ஸ்
Google News Preferred Icon

இளையர் ஒருவர் தாம் தலையங்கி அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதற்கு பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் பதிலடி தருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.

ஷைலா கான் எனும் அந்தப் பிரபலம், வழிப்போக்கர்களுடன் நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தபோது, ஒரு இஸ்லாமிய நாட்டில் செய்ய வேண்டிய ‘சரியான விஷயத்தை’ அப்பெண்ணிடம் சொல்ல அந்த இளையர் முடிவு செய்தார்.

அவரது வார்த்தைகளின்படி, அந்தப் பெண் சால்வையோ தலையங்கியோ கொண்டு தலையை சுற்றாமல் தம் முன் நின்றதால் அவர் ‘குற்றம்’ புரிந்தாராம்.

ஒரு பெண் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற அந்த இளையரின் விமர்சனம் அதோடு நின்றுவிடவில்லை. அவர் தமது சொந்த சால்வையால் அப்பெண்ணின் தலையை மறைக்க முயன்றார்.

‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீதியில் மக்களிடம் பேட்டி எடுக்கும் அந்த யூடியூப் பிரபலம், ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து அவர்களிடம் கருத்து கேட்பதைக் காணொளி காட்டுகிறது.

சில வினாடிகள் கழித்து, அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த இளையர் ஒருவர், தமது சால்வையை அகற்றி அவருடைய தலையில் வைத்தார். அப்பெண் முஸ்லிம் நாடு ஒன்றில் இருப்பதாகவும் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த ஆடவர் நினைவுபடுத்தினார்.

அந்த ஆடவரின் செயலைக் கண்டித்த அப்பெண், “இஸ்லாமிய நம்பிக்கைகளும் நெறிமுறைகளும் ஏன் எப்போதும் துப்பட்டா அணிவதிலே சம்பந்தப்படுத்தப்படுகின்றன?” என்று வினவினார்.

பின்னர், சால்வையை அந்த ஆடவரிடமே திரும்பத் தந்த அந்தப் பெண், தம்மிடம் சொந்த முக்காடு இருப்பதாக உறுதியுடன் சொன்னார். தலையை மறைக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பது தம்முடைய சொந்த விருப்பம் என்று அப்பெண் கூறினார்.

தமது அனுமதியின்றி அந்த இளையர் தம்மைத் தொட்டது பெரிய பாவம் என்று அவரிடம் அந்தப் பிரபலம் சொன்னார்.

“இதுதான் உங்களுக்கு இஸ்லாம் கற்பிக்கிறதா?” என அந்த ஆடவரிடம் அவர் கேட்டார்.

தமக்கு தொந்தரவு கொடுத்ததன் அடிப்படையில் அந்த ஆடவர் கைது செய்யப்படலாம் என்றும் அந்தப் பெண் எச்சரித்தார். எனினும், தாம் தவறு எதுவும் செய்யவில்லை என்று பதிலளித்த அந்த ஆடவர், தாம் முதலில் கூறியதையே வலியுறுத்தினார்.

இந்நிலையில், அந்த ஆடவருக்கு யூடியூப் பிரபலம் பதிலடி கொடுத்ததற்கு இணைவாசிகள் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்