மீண்டும் தாக்குதல் நடக்கலாம்; மேற்குக் கரை மக்கள் அச்சம்

மீண்டும் தாக்குதல் நடக்கலாம்; மேற்குக் கரை மக்கள் அச்சம்

2 mins read
f5ef7898-6a29-4d30-b95b-4813d9c3c238
வீடுகளுக்கும் கார்களுக்கும் இஸ்‌ரேலியக் குடியேறிகள் தீ வைத்ததாக அல் முகாயெர் கிராமவாசிகள் கூறினர். - படம்: இபிஏ

அல் முகாயெர்: பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள அல் முகாயெர் கிராமம் மீது ஏப்ரல் 12ஆம் தேதியன்று இஸ்‌ரேலியக் குடியேறிகள் தாக்குதல் நடத்தினர்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் இஸ்‌ரேலியக் குடியேறிகள் பேரளவில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூடுதல் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வீடுகள், கார்கள் ஆகியவற்றுக்கு இஸ்‌ரேலியக் குடியேறிகள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் பல மணி நேரம் நீடித்ததாகவும் இஸ்‌ரேலிய ராணுவ வீரர்கள் கண்டும் காணாமல் இருந்துவிட்டதாகவும் கிராமவாசிகள் கூறினர்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள வழி ஏதும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்கும் அச்சம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களை அப்பகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றி அதை ஆக்கிரமிப்பதே இஸ்‌ரேலியக் குடியேறிகளின் இலக்கு என்று கிராமவாசி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

14 வயது இஸ்‌ரேலியச் சிறுவன் காணாமல் போனதை அடுத்து, ஏப்ரல் 12ஆம் தேதி முதல் பல பாலஸ்தீன கிராமங்கள் மீது இஸ்‌ரேலியக் குடியேறிகள் பலர் திடீர் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறுவனின் உடல் அல் முகாயெர் கிராமம் அருகில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலில் அச்சிறுவன் மாண்டதாக இஸ்‌ரேல் கூறுகிறது.

இதற்கிடையே, இஸ்‌ரேலியக் குடியேறிகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்‌ரேலியக் குடியேறிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக 45 பாலஸ்தீனர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டதாக அல் முகாயெர் நகராட்சி மன்றத்தின் தலைவர் அமீன் அபு அலியா தெரிவித்தார்.

காயம் அடைந்தோருக்கு முதலுதவி வழங்க விரைந்த மருத்துவ வாகனங்களை இஸ்‌ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஆனால் மருத்துவ வாகனங்களைச் சோதனையிட்ட பிறகே கிராமத்துக்குள் செல்ல அவை அனுமதிக்கப்பட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
பாலஸ்தீனம்இஸ்‌ரேல்