தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கையில் பார்வையாளர்கள் மீது மோதிய பந்தயக் கார்; எழுவர் மரணம்

1 mins read
df31fc62-d299-4a50-9f64-19691b6be2c7
மாண்டவர்களில் எட்டு வயது சிறுமியும் அடங்குவார். - படங்கள்: தி சன் நாளிதழ்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது பந்தயக் கார் பார்வையாளர்கள் மீது மோதியதில் ஏழு பேர் மாண்டனர்; 21 பேர் காயமடைந்தனர்.

மாண்டோரில் எட்டு வயது சிறுமி உட்பட மூன்று பார்வையாளர்களும் நான்கு பந்தய அதிகாரிகளும் அடங்குவர்.

Watch on YouTube

ஐவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காயமடைந்தோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராணுவ முகாம் அமைந்துள்ள டியாடலாவ நகரில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஃபாக்ஸ் ஹில் சூப்பர்கிராஸ் பந்தயம் நடைபெற்றது.

விபத்துடன் தொடர்பான காரை ஓட்டியவர் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அவரது உடல்நிலை குறித்து அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்தும் தெரியவில்லை.

இதற்கிடையே, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், பந்தயத் தடத்தைவிட்டு வெளியானதில் விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறைச் செய்தித்தொடர்பாளர் நிஹால் டல்டுவ தெரிவித்தார்.

இன்னொரு கார் பந்தயத் தடத்தில் கவிழ்ந்ததை அடுத்து, விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

கார் கவிழ்ந்ததை அடுத்து, மற்ற கார்களுக்கு அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிகாரிகள் மஞ்சள் சமிக்ஞை ஒளியைக் காட்டினர்.

ஆனால் வேகமாக வந்த கார் கட்டுப்பாடு இழந்து பார்வையாளர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு அங்கு நிகழ்ந்த பதற்றநிலையைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்