ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஈரானியர்கள்

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஈரானியர்கள்

1 mins read
81196570-45d6-4f3f-b914-481e78540722
உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு ஈரானியர்கள் சிலர் சென்றுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

துபாய்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானியர்கள் சிலர் உம்ரா புனிதப் பயணத்துக்காக ஏப்ரல் 22ஆம் தேதி சவூதி அரேபியா சென்றனர். இந்தத் தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டுள்ளதால் இது சாத்தியமாகி இருப்பதாக அது கூறியது.

ஈரானியர்கள் உம்ரா பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை சவூதி அரேபியா ரத்து செய்துவிட்டதாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஈரானிய ஊடகம் தெரிவித்தது.

ஆனால் உம்ரா பயணம் மேற்கொள்ளும் ஈரானியர்களுக்கான விமானச் சேவை தற்போதுதான் வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக இவ்வளவு நாள்களாக இந்த விமானச் சேவை வழங்கப்படவில்லை என்று ஈரான் கூறியது.

2016ஆம் ஆண்டில் ஷியா முஸ்லிம் மத குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபியா நிறைவேற்றியதாலும் அதை அடுத்து ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவூதி தூதரகத்தில் ஈரானியர்கள் அத்துமீறி நுழைந்ததாலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு பேரளவில் கசந்தது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், சீனாவின் உதவியுடன் இருநாடுகளுக்கும் இடையிலான முழு அரசதந்திர உறவுகள் வழக்கநிலை திரும்பின.

அதற்கு முன்னதாக, ஹஜ் புனிதப் பயணத்தை மட்டுமே மேற்கொள்ள ஈரானியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்