தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்வார்: மலேசியாவில் மாபெரும் பகுதிமின்கடத்திப் பூங்கா கட்டப்படும்

1 mins read
f8628cd5-f3e3-482f-ab47-bf3eaa6d4d69
பகுதிமின்கடத்தி உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தும் முறையை விட்டுவிட்டு அதை வடிவமைப்பதில் ஜாம்பவானாகத் திகழ மலேசியா விழைகிறது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் மாபெரும் பகுதிமின்கடத்திப் பூங்கா கட்டப்பட இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று அறிவித்தார்.

உலகளாவிய பகுதிமின்கடத்தித் துறையில் மலேசியாவின் பங்களிப்பை மேம்படுத்துவதே இப்பூங்காவின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

பகுதிமின்கடத்தித் துறையில் மலேசியா பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

உலகளாவிய பகுதிமின்கடத்தி உற்பத்தியில் மலேசியாவின் பங்கு ஏறத்தாழ 13 விழுக்காடு என்று ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான போஷ்க் கூறியது.

இந்நிலையில், பகுதிமின்கடத்தி உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தும் முறையை விட்டுவிட்டு அதை வடிவமைப்பதில் ஜாம்பவானாகத் திகழ மலேசியா விழைகிறது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

“தென்கிழக்காசியாவிலேயே ஆகப் பெரிய பகுதிமின்கடத்தி வடிவமைப்புப் பூங்கா மலேசியாவில் கட்டப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய வடிவமைப்புப் பூங்காவை மையமாகக் கொண்டு உலகத் தரம்வாய்ந்த நிறுவனங்கள் இயங்கும். உலகளாவிய நிறுவனங்களுடன் அவை இணைந்து செயல்படும்,” என்று திரு அன்வார் கூறினார்.

புதிய பகுதிமின்கடத்தி வடிவமைப்புப் பூங்கா சிலாங்கூர் மாநிலத்தில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கட்டுவதற்கு ஏற்படும் செலவு, எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பகுதிமின்கடத்தித் துறையில் மலேசியா வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.

“தொழில்நுட்ப முதலீடுகளில் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை மலேசிய இதற்கு முன்பு நழுவவிட்டது. எனவே, இதுதொடர்பான உத்தியை மாற்றியமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்