தைவானில் மீண்டும் நிலநடுக்கம்

தைவானில் மீண்டும் நிலநடுக்கம்

2 mins read
b626a50b-1a70-46d2-8b3b-cbc0196df385
நிலநடுக்கம் காரணமாக தைவானில் உள்ள ஹோட்டல் ஒன்றும் குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் ஒரு பக்கமாகச் சாய்ந்தன. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவிலிருந்து ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை வரை பல நிலநடுக்கச் சம்பவங்கள் ஏற்பட்டன.

அவற்றில் ஆக மோசமானது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானது.

அது கிழக்கு ஹுவாலியெனில் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, பல நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 6க்கும் அதிகமான இரு நிலநடுக்கச் சம்பவங்கள் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக தைவானில் உள்ள ஹோட்டல் ஒன்றும் குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் ஒரு பக்கமாகச் சாய்ந்தன.

காயம் அடைந்தோர் குறித்து இதுவரை இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.

ஏப்ரல் 3ஆம் தேதியன்று தைவானின் ஹுவாலியென் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அது ரிக்டர் அளவில் 7.4ஆகப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, பல நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக ஹுவாலியென் பகுதியில் உள்ள பல மலைகளிலிருந்து பாறைகள் விழுந்தன.

அதில் குறைந்தது 17 பேர் மாண்டனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.

சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு சுற்றுப்பயணிகளை இன்னும் காணவில்லை.

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே தைவானை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கம்.

1999ஆம் ஆண்டில் தைவானை ரிக்டர் அளவில் 7.6ஆகப் பதிவான நிலநடுக்கம் உலுக்கியது.

அதில் 2,400 பேர் மாண்டனர்.

அதுவே தைவானிய வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம்.

அதையடுத்து, தைவானின் கட்டுமான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டால் கட்டடங்கள் எளிதில் இடிந்து விழாதிருக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டன.

அதுமட்டுமல்லாது, நிலநடுக்கம் ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தைவானிய மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

தைவானிய மக்களுக்கு நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவற்றின் காரணமாக இம்முறை நிலநடுக்கம் ஏற்பட்டபோது கடும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்