அரசியல் தலைவர்களிடம் பிரபோவோ: ஒன்றுபட்டு இருங்கள்

2 mins read
822fe83a-0f0e-44a4-9f9a-151c48f24613
இந்தோனீசிய அதிபராகவுள்ள திரு பிரபோவோவும் (இடது) துணை அதிபராகவிருக்கும் ஜிப்ரான் ராக்காபுமிங் ராக்கா. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ தமது நாட்டு மக்களுக்காகப் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.

அதோடு, நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஒற்றுமையாக இருக்குமாறு உயரிய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டார்.

திரு பிரபோவோ இவ்வாண்டு அக்டோபர் மாதம் அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்பார். அதை முன்னிட்டு இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் தாம் இறங்கியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று இந்தோனீசிய அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் திரு பிரபோவோ வென்றார்.

அவரே இந்தோனீசியாவின் அடுத்த அதிபர் என்பதை உறுதிப்படுத்தும் சடங்கில் கலந்துகொண்டபோது திரு பிரபோவோ பேசினார். உயரிய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் தாம் பேசிக்கொண்டிருப்பதாகவும் பொது நலனுக்காக முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய இந்தோனீசிய அதிபரான திரு ஜோக்கோ விடோடோ, தேர்தலில் மறைமுகமாக திரு பிரபோவோவுக்கு ஆதரவளித்தார். திரு பிரபோவோ, தமது கூட்டணியில் கூடுதல் கட்சிகளைச் சேர்த்துக்கொள்ளவும் அதன் தொடர்பில் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனக்கு வாக்களிக்காதோர் உட்பட எல்லா இந்தோனீசியர்களுக்காகவும் போராடுவேன் என்பதை நிரூபிப்பேன்,” என்றார் திரு பிரபோவோ.

“இந்தோனீசியா நிலைத்திருக்கவும் செழிப்பான நாடாக வளரவும் உயரிய நிலையில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்கும் தைரியம் இருந்தால் உணர்வுகளை ஓரங்கட்டுவோம், நாட்டின் மீது அன்பை வளர்த்துக்கொள்வோம், நமது மக்களுக்காக ஒன்றாகத் தியாகம் செய்வோம்,” என்று அவர் எடுத்துரைத்தார்.

திரு பிரபோவோ அதிபராவதை எதிர்த்துப் பதிவுசெய்யப்பட்ட புகார்களை இந்தோனீசிய உயர் நீதிமன்றம் மறுத்தது. அதற்கு இரு நாள்களுக்குப் பிறகு அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்