விமான நிலையத்தை இந்தியா, ரஷ்யா வசம் ஒப்படைக்கும் இலங்கை

1 mins read
9215b7d0-8a44-4083-bf80-3db3a11af1d8
மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம். - படம்: ஊடகம்

கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்த அறிக்கையில், நாட்டின் பொருளியல் நிலையையும் அரசு நிறுவனங்களின் இழப்பையும் சரிசெய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் ‘ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ் மென்ட் நிறுவனத்திடமும் 30 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஒப்பந்த மதிப்பு குறித்து எந்தவொரு தகவலும் அதில் தெரிவிக்கப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சீனாவிடமிருந்து நிதி உதவிபெற்று இலங்கையின் மத்தலம் பகுதியில் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் கட்டப்பட்டது. 2013ஆம் ஆண்டு திறப்புவிழா கண்ட அந்த விமான நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானச் சேவை, தொடர்ச்சியான நிதி இழப்பு போன்ற காரணங்களால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

குறிப்புச் சொற்கள்