எங்கள் மீது ஊழல் விசாரணை இல்லை: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மகன்கள்

எங்கள் மீது ஊழல் விசாரணை இல்லை: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மகன்கள்

2 mins read
786afc98-1376-4706-bbf4-e60e365def82
முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவின் மகன்கள் மொக்சானி மகாதீர், மிர்ஸான் மகாதீர். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் இரு மகன்கள் ஊழல் தொடர்பாக தாங்கள் நாட்டின் ஊழல் விசாரணை ஆணையத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திரு மொக்சானி மகாதீரும் மிர்ஸான் மகாதீரும் ஏப்ரல் 27ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் காவல்துறையினர் தங்களிடம் வழங்கிய கடிதத்தில் ஊழல் விசாரணை ஆணைய சட்டத்தின்படி, தாங்கள் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் மகன்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.

“தங்கள் தந்தையார் பிரதமராக பதவி வகித்தபோது அவர் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தாங்கள் செல்வம் ஈட்ட உதவினரா என்பதைத் தீர்மானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிகிறோம்.

“இந்தப் புகார்கள் உண்மையல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இதுநாள்வரை சம்பாதித்தவை சட்டபூர்வமான, முறையான வழிமுறைகளில் என்பதுடன் இதில் எந்தவிதக் குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை என்பதையும் நிரூபிக்க விரும்புகிறோம்,”என்று தங்கள் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் ஊழல் விசாரணை ஆணையம் ஜனவரி மாதம் தங்களுக்கு அனுப்பிய கோரிக்கைக் கடிதத்துக்குப் பின் சொத்துப் பட்டியலை சமர்ப்பிக்கத் தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளதை தாங்கள் உணர்வதாக தெரிவித்தனர்.

“ஊடகத்தில் வரும் தகவல்களுக்கு மாறாக, எங்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அவ்விருவரும் விளக்கினர்.

அவ்விரு சகோதரர்களும் தாங்கள் கடந்த 43 ஆண்டுகளிலான சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டுமென்று ஆணையத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

“ஆண்டுகள் செல்லச் செல்ல தகவல்கள் குறைந்து வந்துள்ளதால் எந்தக் காலகட்டம் ஆணையத்துக்கு மிக முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது என்பதை தெரிவித்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

“நாங்கள் கால அவகாசம் கேட்பதற்குக் காரணம் எங்களுக்கு இருக்கும் சொத்து அளவு என்று குத்தலாகப் பேசப்படுகிறது. இதில் சற்றும் உண்மையில்லை,” என்று திரு மகாதீரின் இரு புதல்வர்களும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்