டைட்டானிக் பயணியின் கடிகாரம் $2 மில்லியனுக்கு விலைபோனது

டைட்டானிக் பயணியின் கடிகாரம் $2 மில்லியனுக்கு விலைபோனது

படம்: இணையம்

28 Apr 2024 - 8:10 pm

1 mins read

லண்டன்: டைட்டானிக் கப்பலின் ஆகப் பணக்காரப் பயணி என்று கருதப்பட்டவரின் உடலிலிருந்து கிடைத்த தங்கக் கடிகாரம், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த ஏலத்தில் 1.17 மில்லியன் பவுண்டுக்கு (S$2 மில்லியன்) விலைபோனது.

கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த 1912ஆம் ஆண்டு டைட்டானிக் அசம்பாவிதத்துடன் தொடர்புடைய பொருள்கள் ஏலமிடப்பட்டதில் இது ஒரு புது சாதனைத் தொகை என்று ஏலமிட்ட நிறுவனத்தார் கூறினர்.

இதற்குமுன் கப்பல் மூழ்கும் வேளையில் மீட்டப்பட்ட வயலின், 2013ஆம் ஆண்டு ஏலத்தில் 1.1 மில்லியன் பவுண்டுக்கு விலைபோனது.

இந்த ஏலத்தில் பாக்கெட் கடிகாரத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டவர் ஓர் அமெரிக்கர்.

அந்த பாக்கெட் கடிகாரம் அமெரிக்க வர்த்தக ஜாம்பவானான ஜான் ஜேக்கப் எஸ்டர் என்பவருடையது. இவர் கப்பலில் இருந்த காலகட்டத்தில் உலகின் ஆகப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.

தம் மனைவியை உயிர்காக்கும் படகில் ஏற்றிவிட்ட பிறகு 47 வயதுடைய திரு எஸ்டர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கப்பல் மூழ்கி ஒரு வாரம் கழித்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடைமைகளில் இந்த பாக்கெட் கடிகாரம் இருந்தது.

குறிப்புச் சொற்கள்