வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தை சுழல்காற்று உலுக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்டோரில் நான்கு மாதக் குழந்தையும் அடங்கும்.
கடந்த வாரயிறுதியில், ஓக்லஹோமாவின் பல பகுதிகளில் சுழல்காற்று வீசியதை அடுத்து பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சுழல்காற்று காரணமாக மிக மோசமான சேதம் ஏற்படக்கூடும் என்று ஓக்லஹோமாவில் உள்ள 7 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏப்ரல் 28ஆம் தேதியன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஏப்ரல் 28ஆம் தேதி நிலவரப்படி, சுழல்காற்று காரணமாக 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் ஓக்லஹோமா அவசரநிலை நிர்வாகத்துறை தெரிவித்தது.
சுழல்காற்று காரணமாக மின்தடை ஏற்பட்டதில் ஏப்ரல் 28ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி 20,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

