தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் 100 கிளைகளை மூடிய கேஎஃப்சி

2 mins read
755ac1e2-16c6-415c-8c63-e3572a0d529b
முன்பெல்லாம் பரபரப்பாகக் காணப்பட்ட கோலாலம்பூரின் ஜாலான் சுல்தானில் உள்ள கேஎஃப்சி உணவகம் தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: கேஎஃப்சி நிறுவனம், மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட அதன் கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

காஸாவில் போர் தொடரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவுடன் தொடர்புடைய வர்த்தகங்களின் பொருள்களைப் புறக்கணிக்கும் போக்கு மலேசியாவில் அண்மை மாதங்களாக நிலவுகிறது.

அதனால், மலேசியாவில் செயல்படும் 108 கேஎஃப்சி விரைவு உணவகக் கிளைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக சீனமொழி மலேசிய நாளேடான நன்யாங் சியாங் பாவ் தகவல் வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போ, ஜாலான் சுல்தான், தாமான் மெலாவதி ஆகிய இடங்களில் உள்ள கேஎஃப்சி கிளைகளில் ‘தற்காலிக மூடல்’ குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணமுடிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் வராததால், அக்கிளைகள் கடந்த ஒரு வாரமாகவே மூடப்பட்டிருப்பதாக அக்கம்பக்கக் கடை ஊழியர்கள் கூறினர்.

கேஎஃப்சி உட்பட, அமெரிக்க விரைவு உணவகங்கள் அனைத்தையுமே இஸ்‌ரேலுடன் தொடர்புடையதாக மலேசியர்கள் கருதுவதாக ‘பிடிஎஸ்’ எனும் ‘புறக்கணிப்பு, விலக்கல், தடை மலேசிய’ அமைப்பு கூறியது.

சென்ற ஆண்டு (2023) அக்டோபரில் இந்தப் புறக்கணிப்பு இயக்கம் தொடங்கியதிலிருந்து, இதைத் தணிக்கும் முயற்சிகளை கேஎஃப்சி மேற்கொண்டது. ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஜோகூர் கார்ப்பரேஷன் நிறுவனம்தான் கேஎஃப்சியின் உரிமையாளர் என்று வலியுறுத்தும் துண்டுச் சீட்டுகளை அது வெளியிட்டது.

இருப்பினும் மலேசியாவில் செயல்படும் கேஎஃப்சி, ஸ்டார்பக்ஸ், மெக்டோனால்ட்’ஸ் போன்ற அமெரிக்க நிறுவனக் கிளைகள் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போவில் உள்ள கேஎஃப்சி உணவகத்தின் கதவில் ‘தற்காலிக மூடல்’ குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூரின் ஜாலான் ஈப்போவில் உள்ள கேஎஃப்சி உணவகத்தின் கதவில் ‘தற்காலிக மூடல்’ குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடகிழக்கு கிளந்தானில் 21 கிளைகளும் (கிட்டத்தட்ட 80% கிளைகள்) ஜோகூரில் 15 கிளைகளும் சிலாங்கூரில் 11 கிளைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்