தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெற்கு ஆசிய நாடுகளில் சுட்டெரிக்கும் வெயில்; பள்ளிகள் மூடல்

2 mins read
2926299c-ea97-4602-8f10-d724fce00a22
மணிலாவில் உள்ள காமன்வெல்த் பள்ளியில் மாணவர்கள் விசிறியுடன் காணப்படுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: தெற்கு ஆசிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) கடுமையான வெப்ப அலை வீசியதால் அந்நாடுகளின் அதிகாரிகள் சுகாதார எச்சரிக்கைகளை விடுத்தனர்.

மக்களும் வீட்டில் தங்க முடியாமல் புழுங்கி பூங்காவிலும் குளிர்சாதன வசதியுள்ள கடைத் தொகுதிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

கடந்த வாரம் முழுவதும் கடுமையான வெப்பம் வட்டார மக்களை வாட்டியது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியசைத் தொட்டதால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இதுவரை இல்லாத வெப்பம் பதிவானதால் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

தாய்லாந்தில் இவ்வாண்டில் இதுவரை குறைந்தது 30 பேர் வெப்பத்துக்குப் பலியாகியுள்ளனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி வடக்கு மாநிலங்களில் வெப்பம் 44.1 டிகிரி செல்சியசைத் தாண்டியது. இதனால் மோசமான சூழ்நிலை ஏற்படும் என்று அந்நாட்டின் வானிலை நிலையம் எச்சரித்தது.

கம்போடியா, மியன்மார், வியட்னாம், இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்து வரும் நாள்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியசைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பகலில் வெளியே செல்ல அச்சமாக இருக்கிறது,” என்று மியன்மாரின் ரங்கூனில் பணியாற்றும் 39 வயது காசாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தமது நான்காவது மாடி வீடு சூடாக இருப்பதால் மாலையில் கணவருடனும் நான்கு வயது மகனுடனும் பூங்காவுக்குச் செல்லவிருப்பதாக அவர் கூறினார்.

“அந்த ஓர் இடத்தில்தான் வெப்பத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்,” என்றார் அவர்.

2023ல் உலக வெப்பம் சாதனை அளவாக அதிகரித்தது. ஆசியா அதிவேகமாக வெப்பமடைந்து வருவதாக ஏப்ரல் 23ஆம் தேதியன்று ஐநாவின் வானிலை மற்றும் பருவநிலை அமைப்பு தெரிவித்தது.

பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலை நீண்டகாலத்துக்கும் தீவிரமாகவும் அடிக்கடி ஏற்படும் என்றும் விரிவான அறிவியல் ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.

மியன்மாரில் ஏப்ரல் மாத சராசரியைவிட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது என்று அதன் வானிலை கண்காணிப்பு நிலையம் கடந்த வாரம் அறிவித்தது.

இதற்கிடையே, சீனாவிலும் வெப்ப அலை வீசுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய சீனா, தெற்கு, தென்மேற்கு மற்றும் மங்கோலியாவின் உட்பகுதிகளில் வெப்பம் தீவிரமடைந்தால் மின்விநியோகம் தற்காலிகமாக குறைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவிலும் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.

இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை எட்டு மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால் வீடுகளில் இருந்து வெளியே செல்ல அனைவரும் அச்சப்படுகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்று வீசி வீசுகிறது.

குறிப்புச் சொற்கள்