தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமசாமி: அன்பு தேவையில்லை, சமத்துவம்தான் வேண்டும்

2 mins read
79c3930d-f37a-43f5-906c-e6ee448ab1b2
மலேசிய இந்தியர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகள் முன்புபோல பாரபட்சத்துடன் நடந்துகொள்ளவோ அவர்களைத் துன்புறுத்தவோ முயற்சி செய்தால் உரிமைக் கட்சி தட்டிக் கேட்கும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் பி. ராமசாமி கூறினார். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.

அவ்வாறு செய்யப்போவதில்லை என்று பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் தமக்கு எவ்விதக் கருத்துப் பிணக்கமும் இல்லை என்றார் அவர்.

ஆனால் நாட்டில் உள்ள பிற இனத்தவர்களுக்குச் சமமாக மலேசிய இந்தியர்கள் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமசாமி கூறினார்.

மலேசியர்கள் என்கிற முறையில் அந்நாட்டு இந்தியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆளுங்கட்சியினர் தம்மிடம் அன்பு காட்டவில்லை எனக் கருதி கோலா குபு பாரு இடைத்தேர்தலில் ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டாக்டர் ராமசாமி அழைப்பு விடுத்துள்ளதாகத் திரு ஃபாமி ஏப்ரல் 29ஆம் தேதியன்று தெரிவித்தார்.

எனவே டாக்டர் ராமசாமி எதிர்க்கட்சியில் சேர வேண்டும் எனத் திரு ஃபாமி கூறினார்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் ராமசாமி, “ அன்பும் ஆதரவும் கிடைக்க பெரிக்கத்தான் நேஷனலில் சேர எனக்கு ஆலோசனை வழங்கியதற்கு நன்றி ஃபாமி. ஆனால் எனக்கு அன்பு தேவையில்லை. மலேசிய இந்தியர்களிடம் அரசாங்கம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று தமது கருத்தை முன்வைத்தார்.

மலேசிய இந்தியர்களுக்கு எதிராக மலேசிய அரசாங்கம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக அவர் குறைகூறினார்.

அரசுத் துறை வேலைகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்தியர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்காததை அவர் சுட்டினார்.

மலேசிய இந்தியர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகள் முன்புபோல பாரபட்சத்துடன் நடந்துகொள்ளவோ அவர்களைத் துன்புறுத்தவோ முயற்சி செய்தால் உரிமைக் கட்சி தட்டிக் கேட்கும் என்றார் டாக்டர் ராமசாமி.

இந்தியர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் இன்னும் நிறைவேற்றாததால் மே 11ஆம் தேதியன்று கோலா குபு பாருவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தாம் அழைப்பு விடுத்ததாக டாக்டர் ராமசாமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்