பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

2 mins read
4a46c4c9-db11-4a06-a0b3-f6f8c5be7f08
நீண்ட ஏணியைக் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழக வளாகக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சன்னல் வழியாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். - படம்: அமெரிக்க ஊடகம்

நியூயார்க்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கட்டடத்தை மாணவர்கள் சிலர் கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்குத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ்  கொண்டு வந்தனர்.

காஸா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பல அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழப்பதைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி இரவு கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நியூயார்க் காவல்துறையினர் நுழைந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.

தலைக்கவசம் அணிந்த அதிகாரிகள் கையில் தடியுடனும் கேடயத்துடன் கட்டடத்துக்குள் நுழைந்ததை அமெரிக்கத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்துக்குள் மாணவர்கள் அத்துமீறி நுழைந்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.

அதிகாரிகள் உள்ளே வர முடியாதபடி வாசலில் தடுப்புகளை அமைத்தனர்.

இந்நிலையில், நீண்ட ஏணியைக் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தி கட்டடத்தின் இரண்டாவது மாடி சன்னல் வழியாகக் காவல்துறையினர் நுழைந்தனர்.

வளாகத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் கட்டடத்துக்கு உள்ளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

அவர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது வாளகத்துக்கு வெளியே கூடிய மாணவர்கள் அதிருப்திக் குரல் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மாணவர்களைக் கைது செய்து அவர்களைப் பேருந்தில் ஏற்றி காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

இதற்கு முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க இருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்