உலக சுகாதார நிறுவனக் கூட்டங்களில் பங்கேற்பது சிரமம்: தைவான்

உலக சுகாதார நிறுவனக் கூட்டங்களில் பங்கேற்பது சிரமம்: தைவான்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

02 May 2024 - 4:35 pm

2 mins read

தைப்பே: இவ்வாண்டு நடைபெறவுள்ள உலக சுகாதார நிறுவன வருடாந்தரக் கூட்டங்களில் தைவான் பங்கேற்பது சிரமமாக இருக்கும் என்றும் இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை தைவான் நாடுவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை (மே 2ஆம் தேதி) அன்று தெரிவித்தார். முன்னதாக இதன் தொடர்பில் தைவானை இந்தக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

பெரும்பாலான உலக நிறுவனக் கூட்டங்களில் பங்கேற்க தைவான் அனுமதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சீனா முன்வைக்கும் ஆட்சேபணை. தைவான் மீது சீனா உரிமை கொண்டாடுவதை அந்நாடு நிராகரித்து வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.

முன்னாள் தைவானிய அதிபர் மா யிங் ஜோ பதவியிலிருந்த காலகட்டமான 2009ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக முடிவெடுக்கும் அதன் உலக நாடுகள் அடங்கிய கூட்டங்களுக்கு தைவான் அனுமதிக்கப்பட்டு வந்தது. அதற்குக் காரணம் திரு மா யிங் ஜோ சீனாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக, பயணத்துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருந்தார்.

ஆனால், 2017ஆம் ஆண்டு சாய் இங் வென் அதிபராக தேர்வு பெற்றபின் சீனா உலக சுகாதார நிறுவனக் கூட்டங்களில் தைவான் பங்கேற்பதை தடுக்க ஆரம்பித்தது.

இது குறித்து தைவானிய நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுடன் புதன்கிழமை (மே 1ஆம் தேதி) அன்று பேசிய தைவானிய வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வு, உலக சுகாதார நிறுவனம் தனது வருடாந்தரக் கூட்டங்களுக்கு மீண்டும் தைவானை அழைக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விடுத்த கோரிக்கையை வலியுறுத்தினார்.

“இவ்வாண்டு உலக சுகாதார நிறுவன வருடாந்தர கூட்டங்களில் பங்கேற்பதில் சில சிரமங்கள் உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் பல நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தைவான் ஈடுபட்டு வருகிறது,” என்று வெளியுறவு அமைச்சர் உ விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
தைவான்