மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்

மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்

2 mins read
செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை ஆகியவற்றில் முதலீடு செய்வதாக அறிவிப்பு
b7b2a3ed-b575-47b0-ba69-03358063accb
மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, மே 2ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். - படம்: இபிஏ

கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) முதலீடு செய்ய மே 2ஆம் தேதி உறுதியளித்துள்ளது.

மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவுவது இதன் நோக்கம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தரவு நிலையங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மேகக் கணிமைச் சேவை ஆகியவை தொடர்பான பல்வேறு முதலீடுகள் குறித்து இப்பயணத்தில் அவர் அறிவிப்பார்.

“மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு உதவும் வகையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் 32 ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் செய்யும் ஆகப் பெரிய முதலீடு இது,” என்று கோலாலம்பூரில் ஆற்றிய உரையில் திரு நாதெல்லா குறிப்பிட்டார்.

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு நிலையத்தை உருவாக்கவும் கிட்டத்தட்ட 200,000 மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

“மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு ஆதரவு வழங்கவும் அதன் மூலம் மலேசியர்கள் அனைவரும் பயனடைவதை உறுதிசெய்யவும் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதலீட்டை வரவேற்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் அரசியல் நிலைத்தன்மையுடனும் மலேசியா விளங்குவதற்கான சான்று இது என்று கூறினார்.

நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு இத்தகைய முதலீடுகள் முக்கியப் பங்களிக்கும் என்று திரு அன்வார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தோனீசியாவில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டைத் திரு நாதெல்லா அறிவித்தார். தாய்லாந்திலும் மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய தரவு நிலையத்தை அமைக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்