தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளால் பயன்இருக்காது: உலக சுகாதார நிறுவனம்

2 mins read
eba9bb0e-20d0-4a5a-b25c-2b110a09e3df
ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், நுண்ணுயிரிகள் அம்மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலை (ஏஎம்ஆர்) ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, அதிக அளவில் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் அவற்றின் திறன் குறைந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பாக்டீரியா, கிருமிகள், பூஞ்சைக் காளான், ஒட்டுண்ணிகள் போன்றவை ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளுக்கு இனி கட்டுப்படமாட்டா என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அந்த நுண்ணுயிரிகள் வளர்த்துக்கொண்டதால் (ஏஎம்ஆர்) ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் திறன் குன்றிப் போனதன் மூலம் கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாகியிருக்கிறது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள நேரிட்ட கொவிட்-19 நோயாளிகளில் 8 விழுக்காட்டினருக்கு மட்டுமே பாக்டீரியா தொற்றுக்கான ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைத் தரவேண்டியிருந்தது. ஆனால் ஏறக்குறைய 75 விழுக்காட்டினருக்கு அந்த மருந்துகள் தரப்பட்டன. ஒருவேளை அந்த மருந்து உதவக்கூடும் என்று கருதி அவை தரப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.

பிலிப்பீன்ஸ் உட்பட மேற்கு பசிபிக் வட்டார நாடுகளில் 33 விழுக்காட்டு நோயாளிகளுக்கு ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் தரப்பட்டன. கிழக்கு மத்தியதரைக்கடல், ஆப்பிரிக்க வட்டாரங்களில் அந்த விகிதம் 83 விழுக்காடு.

2020ஆம் ஆண்டுக்கும் 2022க்கும் இடையில், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கவில்லை. ஆனால் ஆப்பிரிக்காவில் அதிகம் தரப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத் தரவுகள் காட்டுகின்றன.

“ஒரு நோயாளிக்கு ‘ஆன்டிபயாடிக்’ மருந்து தரவேண்டிய சூழல் ஏற்பட்டால், வழக்கமாக அதன் பக்கவிளைவுகளைவிட அதனால் ஏற்படும் நன்மை அதிகமாக இருக்கும். ஆனால் தேவையின்றி இம்மருந்து தரப்பட்டால், பயனில்லை என்பதோடு நுண்ணுயிரிகள் அதற்கு எதிரான எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் அபாயமும் ஏற்படுகிறது,” என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

நுண்ணுயிரிகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துக்கு எதிரான எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொள்ளுதல் (ஏஎம்ஆர்) என்பது உலகளாவிய நிலையில் பொதுச் சுகாதார மேம்பாட்டை எதிர்கொள்வது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அது குறிப்பிட்டது.

பிலிப்பீன்சில் இதனால் 15,700 பேர் உயிரிழந்ததாகவும் 2019ஆம் ஆண்டில் மொத்தம் 56,700 பேர் ஏஎம்ஆர் காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏஎம்ஆர் சூழல் அதிகரிப்பதைத் தடுக்க, பொதுமக்கள் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்