சரவாக்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜேக் வூன் குவெட் ஃபெய் எனும் 47 வயது ஆடவர், தனது பெரோடுவா கெனாரி காரில் தனியாக உலகைச் சுற்றிவரக் கிளம்பியுள்ளார்.
மே 1ஆம் தேதி அவரது பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் நிறைவுற மூன்று ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் 108க்கும் மேலான நாடுகளைக் கடந்து கிட்டத்தட்ட 200,000 கிலோமீட்டர் அவர் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவயது முதலே பரந்து விரிந்த உலகம் முழுவதும் பயணம் செய்யவேண்டும் என்று கனவுகண்டதாகக் கூறினார் வூன்.
தனது பயணத்தின் மூலம் மலேசியாவை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் கலாசாரப் பரிமாற்றத்தின் வாயிலாக ஒற்றுமையையும் நட்பையும் பேணுவதும் இவரது நோக்கங்கள்.
“எனது பயணத்தை ஆவணப்படுத்தி, கற்றல் காணொளிகளை உருவாக்குவேன். மக்களை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்கிறார் வூன்.
இந்தப் பயணத்திற்குக் கிட்டத்தட்ட 860,000 ரிங்கிட் (S$245,600) செலவாகும் என்று இவர் மதிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பெரோடுவா கெனாரி காரைத் தேர்ந்தெடுத்தது பற்றிக் குறிப்பிடுகையில், இது சிக்கனமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய ஏற்றது என்று வூன் கூறினார்.
காரில் சூரியசக்தித் தகடு, சிறிய குளிர்ப்பதனப் பெட்டி, சிறிய அடுப்பு, மாற்று மின்கலன் எனப் பல்வேறு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காரின் பின் இருக்கையில் பொருள்களுக்கான அலமாரியும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் மேற்புரம் உறங்குவதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தாலும் இதில் வசதியாகப் படுத்துறங்கலாம்.
மே 2ஆம் தேதி கோலா திரெங்கானுவில் யாரோ காரின் பின்புற விளக்கைச் சேதப்படுத்திவிட்டதாகவும் இது எதிர்பாராத கூடுதல் செலவு என்றும் கூறும் வூன், இந்தச் சிறிய இடையூறு தனது வாழ்நாள் கனவான பெரும் பயணத்தைப் பாதிக்காது என்கிறார்.

