படுகொலைச் சம்பவத்தில் மூன்று இந்தியர்கள் கைது; சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கனடா பிரதமர் பெருமிதம்

2 mins read
0795b5af-fa72-4e18-aae0-255dc7608faa
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மே 4ஆம் தேதி சீக்கிய பாரம்பரிய, கலாசார நிகழ்ச்சியில் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வான்கூவர்: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி பேசிய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகக் கூறி பெருமைபட்டுக்கொண்டார்.

படுகொலைச் சம்பவத்தில் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கனடியப் பிரதமர் குற்றம் சாட்டியிருந்ததால் இரு நாடுகளுக்கு இடையே உறவு சீர்கெட்டது. கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

இந்த நிலையில் மே 4ஆம் தேதி டொரோன்டோவில் நடைபெற்ற சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய, கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரு ஜஸ்டின் ட்ருடோ, சீக்கியர் சமூகம் பாதுகாப்பற்ற உணர்வில் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனால் நீதித் துறை மீது நம்பிக்கை வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கனடாவில் பாகுபாடு, வன்முறை, அச்சுறுத்தல் இல்லாமல் வாழ ஒவ்வொரு கனடிய குடிமனுக்கும் உரிமை உண்டு என்று அவர் தெரிவித்தார்.

நிஜ்ஜார் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இம்மாதம் 3ஆம் தேதி இந்திய நாட்டைச் சேர்ந்த 22 வயதுள்ள இருவரும் 28 வயதுள்ள ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை, கொலை தொடர்பாகச் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பு இருக்கிறதா, வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக கனடிய காவல்துறை கூறியுள்ளது.

1997ஆம் ஆண்டில் கனடாவுக்குக் குடிபெயர்ந்த நிஜ்ஜார், 2015ஆம் ஆண்டில் கனடிய குடியுரிமையைப் பெற்றார். இந்தியாவில் ‘காலிஸ்தான்’ பெயரில் சீக்கியர்களுக்கு நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர் ஆலோசகராகச் செயல்பட்டு வந்தார்.

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் நபராக இவர் அறிவிக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி இவர் கனடாவில் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.

வான்கூவர் பகுதியில் பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை வழக்கில் தற்போது மூவரை கனடிய அரசு கைது செய்துள்ளது. இவர்கள் மூவரும் கனடாவில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சர், கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களைக் கனடிய அரசு தங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

“கனடிய காவல்துறை தகவல் அளிக்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். கனடாவின் விசாரணை ஓர் “அரசியல் நிர்ப்பந்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இந்தியா மீது குற்றம் சாட்டுவது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிர்ப்பந்தம் என்று திரு ஜெய்சங்கர் மே 4ஆம் தேதி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்