முழு உறுப்பினராவதற்கு ஐநா பொதுச்சபையின் ஆதரவைக் கோரும் பாலஸ்தீனம்

முழு உறுப்பினராவதற்கு ஐநா பொதுச்சபையின் ஆதரவைக் கோரும் பாலஸ்தீனம்

1 mins read
981e5bd4-889b-450a-abaf-1a4b00bef896
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாட்டு நிறுவனக் கட்டடம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பாலஸ்தீனம் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் (ஐநா) முழு உறுப்பினராவதை அங்கீகரிக்கும் நகல் தீர்மானம் மீது ஐக்கிய நாட்டுப் பொதுச்சபை, வெள்ளிக்கிழமை (மே 10) வாக்களிக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தைப் பாலஸ்தீனத்துக்குச் சாதகமான வகையில் மறுபரிசீலனை செய்யும்படி ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் அது பரிந்துரைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற மாதம் இதன் தொடர்பிலான தீர்மானத்தை அமெரிக்கா அதன் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. தற்போது பாலஸ்தீனத்திற்கு உலக அளவில் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த வாக்கெடுப்பு நடைபெறக்கூடும்.

முழு உறுப்பினர் தகுதி பெறுவதற்கான விண்ணப்பத்தை ஐநா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்களான 15 நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஐநாவின் பொதுச்சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஐநா பொதுச்சபை உறுப்பினர்களான 193 நாடுகள் பாலஸ்தீனத்தின் கோரிக்கையை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசதந்திரிகள் கூறுகின்றனர். அதில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று சில அரசதந்திரிகள் கருதுகின்றனர்.

தற்போதைய நகல் தீர்மானம் ஐநா சாசனத்துக்கு எதிரானது என்று ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டான் கூறியுள்ளார். அந்தத் தீர்மானம் ஒப்புதல் பெற்றால், அமெரிக்கா ஐநாவுக்கும் அதன் ஆதரவு அமைப்புகளுக்குமான நிதியை நிறுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்