தீவிர சிகிச்சைப் பிரிவில் மலேசிய காற்பந்து வீரர் ஃபைசல் ஹலிம்

2 mins read
2c780b73-ed89-47cc-b723-79dcfe84cf67
அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான மலேசிய தேசிய காற்பந்து வீரரும் சிலாங்கூர் காற்பந்து வீரருமான ஃபைசல் ஹலிம். - படம்: தி ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய தேசிய காற்பந்து அணி வீரரும் சிலாங்கூர் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வருபவருமான ஃபைசல் ஹலிம் கடந்த மே 5 ஆம் தேதி அமில வீச்சுக்கு ஆளானார்.

அதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமிலம் பட்டதில் அவருக்கு உடலில் பல இடங்களில் கடுமையான, ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவருக்கு மேலும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபைசல் மீது அமில வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் இரண்டாவதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசென் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவருக்கு 30 வயது என்றும் அவர் பண்டார் பாரு பங்கி என்னும் இடத்தில் மே 6ஆம் தேதி கைதுசெய்யப்பட்டதாகவும் திரு ஹுசென் தெரிவித்தார்.

விசாரணைக்காக அந்த ஆடவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் திரு ஹுசென்.

முன்னதாக மே 5ஆம் தேதி பாண்டான் இண்டா என்னும் இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஃபைசல் குறித்துப் பேசிய சிலாங்கூர் காற்பந்துச் சங்கத் துணைத் தலைவர் ஷஹ்ரில் மொக்தார், “மலேசிய தேசிய காற்பந்து வீரரும் சிலாங்கூர் காற்பந்து வீரருமான ஃபைசலுக்கு ஏற்கெனவே, அமிலம் வீசப்பட்ட மே 5ஆம் தேதி இரவு ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு குறைந்தது மேலும் ஓர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

“அமில வீச்சால் அவரது உடலில் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரை நாங்கள் மருத்துவமனையில் சந்தித்தோம். அவரால் பேச முடிந்தது. ஆனால், மெதுவாகவே அவரால் பேச முடிந்தது. அதையடுத்து, அவர் எங்கள் காற்பந்துச் சங்கத்தின் ‘குழு மருத்துவமனை’யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மேலும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறினர்.

“அவருக்கு ஏற்பட்டிருப்பது இரண்டாம் நிலைத் தீக்காயங்கள் அல்ல, நான்காம் நிலைத் தீக்காயங்கள் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஃபைசல் நிலைமை தற்போது நிலையாக இருக்கிறது. இருப்பினும் அவர் நன்றாக இருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. அவரால் அவரது இடது கை இருப்பதை உணர முடியவில்லை என்பதே மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி. அதனால் அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படலாம்,” என்று ஷஹ்ரில் மொக்தார் தெரிவித்தார்.

“அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரு ஃபைசலால் சரியாகப் பேசமுடியவில்லை. எனவே, அவர் மேலும் 10 நாள்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கவேண்டியிருக்கும்,” என்று திரு ஷஹ்ரில் மொக்தார் தெரிவித்துள்ளார்.

கோத்தா தாமான்சாராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) காற்பந்து வீரர் ஃபைசல் மீது சிலர் அமில வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்