உணவு விலை உயர்வால் கோலாலம்பூரில் கூடுதல் சிறார்கள் பசியால் வாடுகின்றனர்

உணவு விலை உயர்வால் கோலாலம்பூரில் கூடுதல் சிறார்கள் பசியால் வாடுகின்றனர்

1 mins read
c9b24a42-e6fa-4caa-9879-9d1a20669c7c
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறார்களில் 52 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக சாப்பிடுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவு சாப்பிடுகின்றனர்.

உணவு விலை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் குடும்பங்கள் செலவைக் குறைத்துக்கொள்வதே அதற்குக் காரணம்.

விலைவாசி உயர்வாலும் நிதிப் பிரச்சினையாலும் பல குடும்பத் தலைவர்கள் (கிட்டத்தட்ட 40%) நீண்டநேரம் வேலை செய்வதுடன் உணவருந்துவதையும் உணவு அல்லாத மற்ற பொருள்களில் செலவிடுவதையும் குறைத்துக்கொண்டு உள்ளனர்.

கோலாலம்பூரில் 16 குடியிருப்புகளில் வசிக்கும் 755 குறைந்த வருமானக் குடும்பங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாட்டு நிறுவன ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறார்களில் 52 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக சாப்பிடுகின்றனர். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு இந்த விகிதம் 45 விழுக்காடாக இருந்தது.

இடைநிலை மாத வருமானமாக கிட்டத்தட்ட 3,000 ரிங்கிட் (S$857) ஈட்டும் குடும்பங்கள், பெருந்தொற்றுக்குப் பிறகு விலைவாசி உயர்வை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதைக் கண்டறிய அந்த ஆய்வு முற்பட்டது.

அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் போதுமான அளவு வருமானம் ஈட்டுவதில் தாங்கள் சிரமப்படுவதாக 10ல் எட்டுக் குடும்பங்கள் கூறின.

விலைவாசி உயர்வால், குறிப்பாக உணவு விலை உயர்வால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 90 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர். 2022ல் இருந்ததைவிட தாங்கள் பொருளாதார ரீதியாக மோசமடைந்திருப்பதாக 50 விழுக்காட்டினர் கூறினர்.

விலைவாசி உயர்வு தங்களை மன ரீதியாக பாதித்துள்ளதாக நான்கில் மூன்று குடும்பங்கள் கருதின.

குறிப்புச் சொற்கள்