கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜாலான் யாப் குவான் செங் வட்டார இரவு விடுதிக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது.
அந்தச் சம்பவத்துக்குமுன் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களையும் ஆடவர் நால்வரையும் அக்காணொளியில் காண முடிந்தது.
கண்காணிப்புப் படக்கருவிப் பதிவு என்று கருதப்படும் அக்காணொளியில், மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆடவர், இறங்கி மோட்டார்சைக்கிளோட்டியை அணுகுவது பதிவாகியுள்ளது.
பின்னர் அவர் ஏதோ ஒரு பொருளை அங்கிருக்கும் கட்டடத்தின்மீது வீசுவதையும் அதையடுத்து தீப்பிழம்பு ஏற்பட்டதையும் காண முடிகிறது.
சிறிது நேரத்தில் மற்றொரு மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆடவரும் அதேபோல பெட்ரோல் குண்டை வீசுவதைக் காண முடிகிறது.
காணொளியில் பதிவாகியுள்ள நேரம், மே 9ஆம் தேதி அதிகாலை 2.20 மணி என்று காட்டுகிறது.
மலேசியக் காவல்துறை இச்சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியது.
சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறும்புச்செயலின் மூலம் ஏற்பட்ட தீச்சம்பவமாகக் கருதி அதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

