இஸ்ரேலுடனான உறவுகளைக் கைவிடத் தயார்: ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள்

இஸ்ரேலுடனான உறவுகளைக் கைவிடத் தயார்: ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள்

1 mins read
ff6d3002-7358-4617-8d4d-e6c25a1d9a37
மட்ரிட் நகரிலுள்ள காம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து மே 7ஆம் தேதி முகாமிட்ட மாணவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

மட்ரிட்: காஸா போரில் அமைதியின் தொடர்பில் தெளிவான கடப்பாடு தெரிவிக்கத் தவறிய இஸ்ரேலியக் கல்வி நிலையங்களுடன் உறவைத் தற்காலிகமாகக் கைவிடத் தயார் என்று ஸ்பெயினில் உள்ள பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தொடர்ந்து ஐரோப்பியப் பல்கலைக்கழக மாணவர்களும் அண்மைய வாரங்களில், காஸாவில் போரை நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலுடன் உறவைத் துண்டித்துக்கொள்ளவும் கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வேந்தர்களின் நிர்வாக வாரியம் வெளியிட்ட அறிக்கை, வன்செயல்களைக் கண்டித்ததுடன் ஸ்பெயின் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்‌ரேல் அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரும் அவர்கள், உறவுகளை மறுஆய்வு செய்து, தேவைப்பட்டால் அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மதிக்கவும் அமைதிக்கு உறுதியான கடப்பாடு தெரிவிக்கவும் தவறிய இஸ்‌ரேலியப் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பைத் தற்காலிகமாகக் கைவிட உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் அந்த அறிக்கை, மாணவர்களை அமைதிப்படுத்துவதாக இல்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை மாணவர் போராட்டங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்று வருகின்றன.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் மாணவர்கள்.

ஏப்ரல் 29ஆம் தேதி ஸ்பெயினில் முதல்முறையாக வெலன்சியா பல்கலைக்கழகத்தில் இந்தப் போராட்டம் தொடங்கியது. பின்னர் பார்சிலோனா, மட்ரிட் என மற்ற பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் கைகோத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்