புகைத்ததைக் கண்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்

புகைத்ததைக் கண்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்

1 mins read
90128c2e-9546-44da-a1e9-790ae2ab15c6
படம்: - பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பள்ளி ஒன்றின் சேமிப்பு அறையில் 48 வயதான ஆசிரியர் ஒருவர் புகைபிடித்துள்ளார். அவரின் இச்செயலைக் கண்ட நான்கு மாணவர்களை அவர் அறைந்து, குத்தி, கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வட்டாரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் ஜோகூரில் இருக்கும் பொந்தியான் வட்டாரத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் வியாழக்கிழமை (மே 9) மாலை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் புகைப்பிடித்ததை மாணவர்கள் கண்டதால் அவர்கள்மீது கோபமடைந்த ஆசிரியர் அவர்களைக் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தித் திட்டியதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆயர் பாலோய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக பொந்தியான் வட்டாரக் காவல்துறை தலைவர் சோஃபி தைப் தெரிவித்தார்.

“நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவர்கள் கண்ணீருடனும் நடுக்கத்துடனும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதைக் கண்டறிந்தோம். மேலும் பள்ளியில் நடந்த இச்சம்பவம் குறித்து அந்தந்த குடும்பங்களுக்கு மாணவர்கள் விவரித்தனர்,” என்று திரு சோஃபி தைப் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் உடலிலும் நெற்றியிலும் காயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த ஆசிரியரைக் காவல்துறையினர் இன்னும் கைதுசெய்யவில்லை என்றும் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் ஆணைக்காகக் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்