பணத்தை மிச்சப்படுத்த பரோட்டா பக்கம் திரும்பியுள்ள ஜோகூர் மக்கள்

2 mins read
14bfe9ab-64ce-4d5b-a6f7-d4640cce6748
பொதுவாக, காலை நேரத்தில் மட்டுமே பரோட்டா சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஜோகூர் மக்கள், தற்போது மதிய, இரவு நேரங்களிலும் பரோட்டாவைச் சாப்பிடுகின்றனர். - படம்: தி ஸ்டார் நாளிதழ்

ஜோகூர் பாரு: செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் ஜோகூரில் பரோட்டா சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அங்குள்ள உணவகங்கள் தெரிவித்துள்ளன.

பொதுவாக, காலை நேரத்தில் மட்டுமே பரோட்டா சாப்பிடும் பழக்கத்தை ஜோகூர் மக்கள் கொண்டிருந்ததாக ஜோகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவர் சங்கத்தின் செயலாளர் திரு உசேன் இப்ராகிம் கூறினார்.

மதிய, இரவு நேரங்களில் நாசி கண்டார் போன்ற உணவுவகைகளை அவர்கள் அதிகம் விரும்பினர்.

ஆனால் தற்போது மதிய, இரவு நேர உணவுக்கும் ஜோகூரில் பலர் பரோட்டாவையே வாங்கிச் சாப்பிடுவதாக திரு உசேன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

ஜோகூரில் ஒரு பரோட்டாவின் விலை 1.20 ரிங்கிட்டிலிருந்து (S$0.34) 1.50 ரிங்கிட் (S$0.43).

வாடிக்கையாளர்கள் பலர் இரண்டு பரோட்டா, ஒரு பானம் ஆகியவற்றுக்கு 5 ரிங்கிட் (S$1.43) மட்டுமே செலவு செய்வதாக திரு உசேன் கூறினார்.

எனவே, ஜோகூரில் உள்ள பல உணவகங்கள் பரோட்டா போடுவதில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்துகின்றன. மற்ற வகை உணவுவகைகளை அவ்வளவாகச் சமைப்பதில்லை என்றார் அவர்.

இதற்கிடையே, விலைவாசி அதிகரிப்பைக் காரணம் காட்டி உடல் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு விளைவிக்கக்கூடிய உணவுவகைகளை மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் தியன் சூன் வலியுறுத்தியுள்ளார்.

சத்துள்ள உணவுவகை மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.

ஜோகூரில் பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அவர் நினைவூட்டினார்.

எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் வாழ்க்கையில் அவசியமானவை என்று அவர் ஜோகூர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்