சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கம், 2028ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாட்டிலிருந்து கடல் வழியாக ஆடுகளை உயிரோடு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று சனிக்கிழமை ( மே 11) அறிவித்தது.
விலங்கு நல அமைப்புகளால் நீண்டகாலமாக எதிர்க்கப்பட்ட ஒரு நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
மே 11ஆம் தேதி வேளாண் அமைச்சர் முர்ரே வாட் அறிக்கை வாயிலாக இதனைத் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய நடைமுறையைப் படிப்படியாக முடிவு கட்டும் வகையில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடல் வழியாக ஆடுகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்படும் தடையால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் விவசாய சமூகத்தைப் பாழ்படுத்தும் என்றும் விவசாயக் குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“ஆடுகளை வளர்க்கும் பண்ணைகள் உட்பட இதில் பாதிக்கப்படுவோருக்கு உதவ ஐந்து ஆண்டுகளுக்கு 107 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள நிதியுதவி வழங்கப்படும்,” என்று திரு வாட் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். பாதிக்கப்படுவோர் இப்போதே செயல்பட்டுத் தயாராகலாம்,” என்று திரு வாட் குறிப்பிட்டார்.
ஆடுகளை கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டம் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தடை மற்ற கால்நடை ஏற்றுமதிக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. விமானம் மூலம் நேரடி செம்மறி ஆடு ஏற்றுமதிக்கும் இது பொருந்தாது.

