போர்ட்டோ அலிகிரி: தென் பிரேசிலில் மீண்டும் கனமழை கொட்டியதால் பாதுகாப்பான வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது.
அவர்களில் பலரது வீடுகள் ஏற்கெனவே பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
ரியோ கிரான்டே டே சுல் மாநிலக் குடியிருப்பாளர்கள் வார இறுதியை அவதியுடன் கழித்தனர். ஏற்கெனவே பெய்த மழையில் நகர வீதிகளில் நிரம்பிய நீர் வழியத் தொடங்கிய வேளையில் மீண்டும் பெய்த மழையால் வீதிகள் ஆறுகளாக மாறின.
எல் நினோ வெப்பநிலை தாக்கத்தால் இதுவரை அங்கு இரண்டு மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.
126 பேர் மாண்டுவிட்ட நிலையில் 756 பேர் காயமடைந்தனர். மேலும் 141 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் மாநிலத் தலைநகர் போர்ட்டோ அலிகிரியில் வெள்ளிக்கிழமை வழக்கநிலை திரும்புவதற்கான அறிகுறி காணப்பட்டது.
சில வர்த்தகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் ஓடிய நீர் வடிந்துவிட்டதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதிதாகப் பெய்த மழை மீண்டும் சிரமத்தை ஏற்படுத்தியதாக ஊடகச் செய்திகள் கூறின.

