புதுடெல்லி: டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (மே 10) இந்திய உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியது. அதையடுத்து அவர் அன்றிரவே திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறைக்கு வெளியே கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் சிறைக்கு வெளியே திரண்டு கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் கன்னாட் பிளேசில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையன்று (மே 11) கெஜ்ரிவால் சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“திகார் சிறையில் இருந்து 50 நாட்கள் கழித்து தற்போது வெளியே வந்திருக்கிறேன். முக்கியத் தலைவர்களை சிறைக்கு அனுப்பினால் ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.
“ஊழலை எதிர்த்துப் போராட விரும்பினால், பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாஜகவில் சேர்பவர்களின் வழக்குகள் மறைந்துவிட்டன. எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவே என்னை கைது செய்தனர். கெஜ்ரிவாலைக் கைது செய்ய முடியும்போது, யாரையும் கைது செய்ய முடியும் என்பதே பாஜகவின் மிரட்டல்” என்று கெஜ்ரிவால் கூறியதாக ‘இந்து தமிழ்’ குறிப்பிட்டது.
இந்நிலையில் தெற்கு டெல்லியில் சனிக்கிழமை (மே 11) நடைபெறும் பிரமாண்ட வாகனப் பேரணியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுடன் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.
தற்போது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மூன்று கட்டங்கள் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை கிடைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக அவர் கடுமையாக பிரசாரம் மேற்கொள்வார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லி மாநிலத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூன் 1ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் இருப்பார். ஜூன் 2ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும்.