சீக்கியர் படுகொலைச் சம்பவத்தில் மேலும் ஓர் இந்தியர் கைது

சீக்கியர் படுகொலைச் சம்பவத்தில் மேலும் ஓர் இந்தியர் கைது

1 mins read
22ff907d-eec6-476b-9afc-72a744b8489e
இவ்வாண்டு மே 3ஆம் தேதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட இடமான குருநானக் சீக் குருத்வாராவில் மக்கள் கூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

டொராண்டோ: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஓர் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடிய காவல்துறை சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்தது.

இப்படுகொலைச் சம்பவத்தால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு சீர்கெட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில் கனடிய காவல்துறை அதிகாரிகள் ஆல்பர்ட்டாவில் உள்ள எட்மண்டன் நகரில் இப்படுகொலையில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களைக் கைது செய்தனர்.

இதில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பு இருக்கிறதா, வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுவதாகக் கனடிய காவல்துறை கூறியுள்ளது.

இதற்கிடையே, இப்படுகொலையில் தொடர்பிருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான அவருடைய பெயர் அமந்தீப் சிங்.

அவர்மீது கொலை, கொலை தொடர்பாகச் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.

மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமந்தீப் சிங், இவ்வழக்கில் தொடர்பில்லாத வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கெனவே சிறைக்காவலில் இருந்ததாக அக்குழு மேலும் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்