மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள பல இடங்களை ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேன்-ரஷ்யா எல்லையோரம் உள்ள குர்ஸ்க் மாநிலத்தில் எட்டு ஆளில்லா வானூர்திகளை சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறினர்.
காயமடைந்தோர், பொருட்சேதம் குறித்து தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
லிப்பெட்ஸ்க் பகுதியில் உள்ள மின்சார நிலையத்தில் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அங்கு தீ மூண்டது. ஆனால் தீயை ரஷ்ய அதிகாரிகள் அணைத்துவிட்டதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும் குர்க்ஸ் மாநிலத்தின் ஆளுநர் இகோர் ஆர்டாமோனோவ் கூறினார்.
உக்ரேனுடனான எல்லைப் பகுதியில் உள்ள பெல்கொரோட் மாநிலத்தில் மேலும் பல ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அம்மாநில ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாகோவ் தெரிவித்தார்.
தாக்குதல் காரணமாக அந்த மாநிலத்தில் ஐந்து வீடுகள் சேதமடைந்தன.
ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

