அமெரிக்கா-உக்ரேன் ஒருமைப்பாட்டைக் காட்ட கியவ் சென்றடைந்த பிளிங்கன்

1 mins read
f5700b77-e7eb-4920-9fae-93f03870ccf7
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மே 14ஆம் தேதி உக்ரேனியத் தலைநகர் கியவ் சென்றடைந்தார். அவர் அங்கு ரயிலில் வந்து இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனியர்களுக்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

உக்ரேனுக்கு 61 பில்லியன் அமெரிக்க டாலர் (S$82.6 பில்லியன்) பெறுமானமுள்ள ராணுவ உதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.

உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் உக்ரேனின் தற்காப்பை எவ்வாறு வலுப்படுத்தும் என்பது குறித்துப் பேச திரு பிளிங்கன், கியவ் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து அவற்றை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா அனுப்பிவைக்கும் தொலைதூர இலக்குகளை எட்டும் ஏவுகணைகளும் வான் தற்காப்புச் சாதனங்களும் உக்ரேனைக் கூடிய விரைவில் சென்றடையும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

உக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆதரவு என்றென்றும் இருக்கும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உட்பட மற்ற அதிகாரிகளுக்குத் திரு பிளிங்கன் உறுதி அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்